கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை புரிகிறார் என்ற தகவலை தேவஸ்தானம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள், அங்கு நிலவும் குறைபாடுகள் ஆகியவற்றை நேரில் பார்ப்பதற்கும் கேட்டறிவதற்கும் அவர் வருகிறார் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தைப்பூசத் திருநாளுக்கு டத்தோஸ்ரீ அன்வார் வருகை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து அவர் பத்துமலைக்கு வருகை புரிய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் பத்துமலைக்கு இன்று முதன்முறையாக வருகை புரியும் பிரதமரை வரவேற்பதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானத் தகவல் கூறியது.
வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அவர் பத்துமலைக்கு வருகை புரிவது மலேசிய இந்தியர்களுக்குக் குறிப்பாக இந்து சமயத்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தருவதாக அமைந்திருக்கிறது.
சர்வ சமய மன்ற நிகழ்ச்சி வழிகாட்டி
இதனிடையே முஸ்லிம் அல்லாதாரின் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு ஒரு புதிய வழிகாட்டி தயாரிக்கப்படுகிறது என்ற விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை இன்றைய தன்னுடைய கூட்டத்தில் அமைச்சரவை விவாதிக்கும் என்பதைப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவாக ஆராயப்படும் என்று சொன்னார். முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தலங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு முஸ்லிம் தலைவர்களை அழைப்பதற்கு முன்னதாக முஸ்லிம் அல்லாத ஏற்பாட்டாளர்கள் இஸ்லாமிய மன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தைப் பரிந்துரைத்திருப்பதாக பிரதமர் இலாகா சமய விவகார அமைச்சர் டத்தோ முகமட் நைய்ம் மொக்தார் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உடனடியாகத் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தி இருந்தார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரத்தைக் கிளறியதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரை அன்வார் கடந்த வாரம் மிகக்கடுமையாகக் கண்டித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.