புத்ராஜெயா,
பொதுச்சேவை இலாகா அரசாங்கத் துறையில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும். உயர் பதவிகளில் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று பொதுச்சேவை ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜைலானி முகமட் யூசோப் உறுதி அளித்திருக்கிறார் என்று செனட்டர் டத்தோ சிவராஜ சந்திரன் கூறினார்.
அரசாங்கச் சேவையில் பங்கேற்று நாட்டிற்காக சேவை செய்வதற்குத் தயாராக இருக்கும் அதற்குரிய தகுதியோடு ஆர்வத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு பொதுச்சேவை இலாகா வாய்ப்பு வழங்கும் என்று அவர் உறுதி அளித்ததாக மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
அரசாங்கத் துறையில் வேலை செய்வதற்கு இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் அதிகமாக முன்வர வேண்டும். அண்மைக் காலமாக அரசாங்க வேலைக்கு மனுச் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அவர்களின் ஆர்வத்தைக் காட்டுவதாக உள்ளது என்று டத்தோ சிவராஜுடன் நடத்தப்பட்ட ஒரு சந்திப்பில் அமாட் ஜைலானி குறிப்பிட்டார்.
அதேசமயத்தில் விண்ணப்பிக்கும்போது அதற்குரிய நடைமுறைகளைப் படித்து தெளிவாகப் புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய வேண்டும். இது வேலைக்கான தேர்வை எளிதாக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிறைவான வாய்ப்புகளை வழங்குவதற்கு பொதுச்சேவை ஆணையம் தயாராக இருக்கிறது. பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் இதன் தொடர்பில் விழிப்புணர்வுப் பயிற்சிகளை நடத்தி விரிவான விளக்கத்தை அளிப்பதற்கும் ஆணையம் தயாராக இருக்கிறது என்று அவர் உறுதி அளித்திருக்கிறார்.
டத்தோஸ்ரீ ஜைலானி அமாட்டுடன் நடத்தப்பட்ட இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கை தருவதாகவும் உள்ளது என்று தெரிவித்த டத்தோ சிவராஜ், இந்தச் சந்திப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் வாக்குறுதி அளித்தபடி இந்திய சமுதாயத்தினருக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை நேரில் கவனிக்கப்போவதாகவும் சொன்னார்.
கடந்த காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படாததால் நமக்கான தேவைகளை அவர்களால் நிறைவு செய்ய முடியவில்லை. இப்போது அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதியின் கீழ் வேலை வாய்ப்புகள் விரைந்து கிடைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.