வகுப்புத் தோழனை 108 முறை கம்பஸ் கருவியால் குத்திய நான்காம் வகுப்பு மாணவர்கள்

இந்தூர்:

நான்காம் வகுப்பு மாணவன் ஒருவனை கம்பஸ் கருவியால் (Geometry compass) சக மாணவர்கள் மூவர் சேர்ந்து 108 முறை தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் இம்மாதம் 24ஆம் தேதி இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.

இதன் தொடர்பில் புலனாய்வு அறிக்கை வழங்கும்படி காவல்துறையிடம் குழந்தை நல்வாழ்வுக் குழு கோரியுள்ளது.

“இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது. தங்களுக்குள் சண்டை மூண்டபோது ஒரு மாணவரை மற்ற மூவரும் சேர்ந்து 108 முறை கம்பஸ் கருவியால் குத்தியுள்ளனர். இந்தச் சிறுவயதில் இப்படி மூர்க்கமாக நடந்துகொள்ள என்ன காரணம் என்பதைக் கண்டறிவதற்காக காவல்துறை விசாரணை அறிக்கையைக் கேட்டுள்ளோம்,” என்று குழந்தை நல்வாழ்வுக் குழுவின் தலைவர் பல்லவி போர்வால் தெரிவித்தார்.

“வீட்டிற்கு வந்ததும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து என் மகன் சொன்னான். சக வகுப்புத் தோழர்கள் அவனிடம் அவ்வாறு நடந்துகொள்ள என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனாலும் வகுப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியைப் பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை,” என்று அச்சிறுவனின் தந்தை விளக்கினார்.

அத்தாக்குதலால் தன் மகனின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறைத் துணை ஆணையர் விவேக் சிங் சௌகான் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here