உலகின் பிரபலமான நிறுவனமான அமேசான், அதன் இரண்டாவது அலுவலகத்தை புதன்கிழமை (பிப்ரவரி 12) சிங்கப்பூரில் திறந்துள்ளது. மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த அலுவலகம் ஆசிய பசிபிக் வட்டார கணினி தலைமையகமாகச் செயல்படும்.
தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான அமேசான், 2024 மே மாதம் சிங்கப்பூரின் மேகக் கணினி உள்கட்டமைப்பில் 2024 முதல் 2028 வரை 12 பில்லியன் வெள்ளி (US$8.8 பில்லியன்) முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போதைய முதலீடு, முந்தைய முதலீட்டு உறுதியையும் சேர்த்து, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.7 பில்லியன் வெள்ளி பங்களிப்பை 2028ஆம் ஆண்டுவாக்கில் வழங்கும் என்று அமேசான் தெரிவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் வர்த்தகங்களில் 12,300 முழுநேரத்துக்கு ஈடான வேலைகளுக்கு அது ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த முதலீடும், வட்டார முழுவதும் எங்களின் முந்தைய திட்டமிடப்பட்ட முதலீடுகளும் சிங்கப்பூர் மீதான எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. இவ்வட்டாரத்தின் தொழில்நுட்ப மையமாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது,” என்று ஆசியானின் அமேசான் வெப் சர்வீசசின் நிர்வாக இயக்குநர் ஜெஃப் ஜான்சன் தெரிவித்தார்.