ஜோகூர் பாரு:
நேற்று, ஜோகூர் காஸ்வே அருகேயுள்ள சாலையின் நடுவில் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
தகவல் தெரிந்த பொதுமக்கள் தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல் தலைமையகத்தை (IPD) 07-2182323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் இங் பூன் ஜியானை 016-7500470 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
தோயோத்தா வெல்ஃபயர் என்று நம்பப்படும் பல்நோக்கு வாகனத்தில் (MPV) ஜோகூர் காஸ்வேயில் பயணித்த இரண்டு ஆண்களுக்கு இடையே நடக்கும் சண்டையையும், பின்னர் இந்த சண்டை அங்கிருந்த சாலை பயனர்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதை குறித்த வைரல் காணொலி காட்டுகிறது.