ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.
கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ் நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இத்திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் இதுவரை 335 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘அமரன்’ படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில், படத்தின் வெற்றிவிழாவை படக்குழு நேற்று கொண்டாடினர். இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற ஹே மின்னலே பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.





























