ஜோகூர் பாரு:
உணவகங்களில் புகைபிடிக்கும் தனிப்பட்டவர்களைப் படம், காணொளிப் பதிவு செய்து பொதுமக்கள் புகார் செய்ய ஜோகூர் மாநில சுகாதார துறை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் சட்டத்தை நிலைநாட்ட பொதுமக்கள் தங்களுடைய பங்கை ஆற்றத் தயங்கக்கூடாது என்று ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் லிங் டியான் சூன் தெரிவித்தார்.
பொதுமக்கள் எடுத்து அனுப்பும் ஆதாரங்கள் அமலாக்க நடவடிக்கைகளுக்காக மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
“உணவகங்கள் அல்லது உணவு நிலையங்களில் தடை செய்யப்பட்ட இடங்களில் யாராவது புகைபிடித்தால் புகைப்படம் அல்லது காணொளிப் பதிவு செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். பொதுச் சுகாதாரம் பாதிக்கப்படுவதால் இந்த விவகாரங்களில் நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். புகார்கள் வந்ததும் சம்பந்தப்பட்ட இடத்தை சோதனையிடுவோம்.
“சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். எனவே அரசாங்க ஊழியர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும்,” என்று ஐந்து புதிய மருத்துவ வசதிகள் தொடங்கப்பட்ட பிறகு அவர் தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற கேபிஜே பண்டார் டத்தோ ஓன் சிறப்பு மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி முஹமட் அமின் உத்மான் பேசுகையில், புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவ வசதிகள் ஆறாவது ஆண்டைக் கொண்டாடும் மருத்துவமனை சேவையின் தரத்தை மேலும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்.