அமிர்தசரஸ்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் அரசாங்கம் எடுத்துவரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சட்டவிரோதக் குடியேறிகளை நாடுகடத்தி வருகின்றனர்.
அவ்வாறு நாடுகடத்தப்படுபவர்களில் இந்தியர்களும் அடங்குவர். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 104 பேருடன் முதல் விமானம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அமிர்தசரஸ் வந்தடைந்தது.
117 பேருடன் இரண்டாவது விமானம் பிப்ரவரி 15ஆம் தேதியும் 112 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு மூன்றாவது விமானம் பிப்ரவரி 16ஆம் தேதியும் அமிர்தசரசில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கின.
மூன்றாவது விமானத்தில் நாடு கடத்தப்பட்ட 112 பேரில் 44 பேர் ஹரியானாவையும் 33 பேர் குஜராத்தையும் 31 பேர் பஞ்சாபையும் இருவர் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர்களில் 19 பெண்களும் 2 கைக்குழந்தைகளும் 14 சிறுவர்களும் அடங்குவர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் சிலரின் குடும்பங்கள் ஏற்கெனவே விமான நிலையத்தை அடைந்துள்ள நிலையில், குடியேற்றம், சரிபார்ப்பு, பின்னணிச் சோதனைகள் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடித்த பின்னர் நாடு கடத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
விமானங்களைத் தரையிறக்க அமிர்தசரஸ் விமான நிலையத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக மத்திய அரசை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்தார். நாடு கடத்தப்பட்ட அனைவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை உருவாக்குவதன் மூலம் பாஜக தலைமையிலான அரசாங்கம் புனித நகரத்தை இழிவுபடுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.