பெட்ரோனாஸின் எண்ணெய் & கியாஸ் உரிமைகள் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வாருங்கள்-சரவாக்கிற்கு கருவூல முன்னாள் அதிகாரி வலியுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா:

1974 பெட்ரோலிய மேம்பாட்டு சட்டம் முறையாக இயற்றப்பட்டது. அதுவே உச்சம். இதில் சரவாக் மாநில அரசாங்கத்தின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. கலந்து பேசப்படவில்லை என்று சொல்பவர்கள் உண்மை தெரிந்து பேசவேண்டும் என்கிறார் கருவூல முன்னாள் அதிகாரி நிக் அஸ்மி நிக் டாவுட்.

சரவாக்கில் உள்ள எண்ணெய், கியாஸ் வளங்கள் மீது பெட்ரோனாஸ் கொண்டிருக்கும் உரிமை குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என்று மலேசியர்களை அவர் வலியுறுத்தினார்.

தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் – பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட் (பெட்ரோஸ்) இடையிலான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோனாஸஸன் எண்ணெய், கியாஸ் உரிமையை சந்தேகிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

1974 பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தை (PDA) எண்ணெய், கியாஸ் மேலாண்மையின் முக்கிய சட்டவடிவமாக பிரதமர் அன்வார் இப்ராஹிம், சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓப்பெங் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டனர் என்று நிக் அஸ்மி நிக் டாவுட் கூறினார்.

பிப்ரவரி 17 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அன்வார், பெட்ரோஸ் கியாஸ் எடுக்கும் பணியை தொடங்கிவிட்டாலும் பெட்ரோனாஸின் நடப்பு அனைத்துலக, உள்நாட்டு குத்தகைகளை பாதிக்காது என்று தெரிவித்தார்.

இந்த சட்ட கட்டமைப்பு பற்றி தெரிந்திருந்தும் அனைத்து உள்நாட்டுப் பயனீட்டாளர்களும் பெட்ரோஸில் இருந்துதான் கியாஸ் வாங்க வேண்டும் என்று சரவாக் கட்டாயப்படுத்தி வருகிறது என்று சரவாக் அரசாங்கத்தின் வட்டாரமொன்று தெரிவித்தது. இந்நிலையில் சரவாக் அரசாங்கத்தின் இப்போக்கானது அம்மாநிலத்தில் உள்ள பயனீட்டாளர்கள் உடன் உள்ள பெட்ரோனாஸின் நடப்பு வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும் என்று அவ்வட்டாரம் கூறியது.

PDA சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. கூட்டரசு சட்டமானது மாநிலச் சட்டங்களுக்கு மேலானது. இவ்விவகாரத்தில் இரண்டு தரப்புக்கும் இடையில் சர்ச்சை தலையெடுக்குமாயின் கூட்டரசு சட்டமே மேலோங்கி இருக்கும்.

எண்ணெய், கியாஸ் முழுக் கட்டுப்பாடும் பெட்ரோனாஸ் வசமே உள்ளது. இதனை PDA வழி கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. இச்சட்டம் நாடாளுமன்ற மக்களைவில் முறையாக நிறைவேற்றப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அரை வேக்காட்டு வாதங்கள், சர்ச்சைகள் இதனை மாற்ற முடியாது. சரவாக் பிரதிநிதிகள் மேலும் அனைவரும் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும். உண்மையை மட்டும் பேச வேண்டும். மலேசியர்களிடையிலான உறவுகளை பாதிக்கும் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் எண்ணெய், கியாஸ் எடுக்கும் பணிகளுக்கான முழு அதிகாரத்தையும் உரிமையையும் PDA பெட்ரோனஸுக்கு வழங்குகிறது.

PDA சட்டத்திற்கு முன்பு எண்ணெய், கியாஸ் மீது மலேசியா எவ்வித உரிமையையும் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. வெளிநாட்டு எண்ணெய் ஜாம்பவான்களுக்கு காலனித்துவ ஆட்சியாளர்கள் அந்த அதிகாரத்தை முழமையாக வழங்கி இருந்தனர்.

பிரிட்டிஷ் ராஜ்யத்திடமிருந்து மலாயாவின் சுதந்திரத்தைப் பெற்று தந்த நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் கூட இந்த உரிமையையும் அதிகாரத்தையும் மீட்டுத் தருவதில் தோல்வி கண்டார்.

மார்ச் 3 ஆம் தேதி சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி Sarawak United People’s Party பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தை செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்வி எழுப்பிய சரவாக் மாநில டிஏபி கட்சியை கடுமையாக விமர்சித்தது. இதற்கு முன்னதாக அக்கட்சி இதன் செல்லுபடியாகும் தன்மையை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ரசாக் ஹுசேன் தலைமையிலான மத்திய அரசாங்கம் பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தை ரகசியமாக இயற்றியது என்று பிப்ரவரி மாத தொடக்கத்தில் சரவாக்கின் சட்ட வழக்கறிஞர் ஜே.சி. ஃபோங் குற்றம்சாட்டியிருந்தார்.

பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் இயற்றப்பட்ட போது சரவாக்கின் ஆலோசனை பெறப்படவில்லை என்று கூறுபவர்கள் உண்மை அறிந்து, தெரிந்து பேச வேண்டும் என்று நிக் அஸ்மி கூறினார்.

தெங்கு ரஸாலி ஹம்ஸா தலைமையில் பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது அப்போதைய சரவாக் முதலமைச்சர் அப்துல் ரஹ்மான் யாக்கோப் அதற்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.

அப்போதைய மூல தொழில் துறை அமைச்சர் அப்துல் தாய்ப் மாஹ்முட் (பின்னாளில் சரவாக்கின் முதலமைச்சர், ஆளுநர்) நாடாளுமன்ற மக்களவையில் ஹைட்ரோகார்பன் மசோதாவை சமர்ப்பித்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் அப்துல் ரஹ்மான் யாக்கோப் அனைவருக்கும் பலன் தரக்கூடிய வகையில் நாடாளுமன்ற விவாதத்தின் போது தெங்கு ரஸாலியுடன் இணைந்து எண்ணைய்யை தோண்டி அதனை விநியோகிக்கும் பொறுப்பை பெட்ரோனாஸிடம் ஒப்படைக்கும் பரிந்துரையை முன் வைத்தார்.

Vesting instrument என்ற ஆவணம் இன்றி பெட்ரோலிய மேம்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது என்று அவர் 1976 ஜுலை 29 ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.

பெட்ரோனாஸுக்கு நிரந்தரமாக அதிகாரம் வழங்கும் இந்த vesting order-இல் அனைத்து மாநிலங்களும் கையொப்பமிட்டன.

முன்னாள் பிரதமர் ரஸாக் ஹுசேன் மேலும் பலரின் முன்னிலையில் பெட்ரோலியம் மேம்பாட்டு சட்ட அமலாக்க நிகழ்ச்சியில் அப்போதைய சரவாக் மாநில செயலாளர் பூஜாங் நோர் அதிகார சாசனத்தில் கையொப்பமிட்டார்.

இந்த பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டதில் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்படவில்லை, ரஹ்மான் யாக்கோப் சரவாக்கின் உரிமைகளில் தன்னிச்சையாக கையொப்பமிட்டார் என்று கூறப்படுவதை நிக் அஸ்மி நிராகரித்தார்.

சரவாக் சட்ட மன்றத்தில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது.

அப்போதைய சோலிசிட்டர் ஜெனரல் சாலே அபாஸ் உட்பட பெட்ரோனாஸ் நிக் சாகிர் மேலும் அவர்தம் வழுக்கறிஞர் குழுவினர் பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் பெட்ரோனாஸுக்கு அதிகாரம் அளிக்கும் அனைத்து சட்டப்பூர்வ, அரசியலமைப்பு கட்டத்தில் குறியிடப்படுவதை கண்காணித்தனர்.

தெங்கு ரஸாலி ஹம்ஸா தங்களது சட்டப் பேரவைகளில் எவ்வித எதிர்மறையான மசோதாக்களை நிறைவேற்ற வேண்டாம் என்று அனைத்து மாநில தலைமைத்துவங்களுக்கு ஆலோசனை கூறினார். இச்சட்டத்திற்கு ரஹ்மான் யாக்கோப் சரவாக் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எண்ணெய், கியாஸ் கண்டுபிடிக்கப்பட்டால் அம்மாநிலங்களுக்கு 5 விழுக்காடு ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கியாஸ் எடுக்கும் பணிக்கு சரவாக் நியமனம் செய்யப்படுவது தவறாகாது. பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் பிரிவு 6 மூன்றாவது தரப்புக்கு அப்பங்கினை வழங்குவதற்கு பிரதமருக்கு அதிகாரம் அளிக்கிறது என்று நிக் அஸ்மி தெரிவித்தார்.

கியாஸ் தோண்டும் பணியில் ஈடுபடும் தரப்பு கியாஸ் விநியோகம் செய்வதோடு மட்டும் அன்றி பைப்லைன்கள் உட்பட அனைத்து கட்டமைப்புகளையும் தர உயர்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கு சரவாக்கும் மற்ற மாநிலங்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அதற்கு முன் அதனை முறையாக நிர்வகிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். தோல்வி கண்டால் பெட்ரோனாஸ் அவர்களை மீட்டெடுக்காது என்று நிக் அஸ்மி எச்சரித்தார்.

இந்தப் பணிக்கு குறிப்பிடத்தக்க அளவிளான பண மூலதனமும் அவசியமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்ரோஸ் நிறுவனம் மூலதன செலவை ஏற்கும் பட்சத்தில் பெட்ரோனாஸின் சுமை குறையும். இதன் வழி பெட்ரோனாஸ் உயர் வருமான முதலீடுகளில் கவனம் செலுத்த இயலும் என்று நிக் அஸ்மி மேலும் சொன்னார்.

அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் பெட்ரோனாஸ் வசம் தொடர்ந்து இருந்தாலும் ஒரு கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் மற்ற மாநிலங்களும் பங்குதாரராக ஆகலாம். அனைத்துலக கார்ப்பரேட் நிறுவனங்களாக செயல்படலாம். இந்த நடைமுறை திறக்கப்பட்டுள்ளது. தேர்வு பெற்றால் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரும் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சட்ட கட்டமைப்பு வெகு தெளிவாக உள்ளது. அடிப்படையற்ற வாதங்களுக்கு இடமே இல்லை என்றும் நிக் அஸ்மி குறிப்பிட்டார்.

சரவாக்கின் பெட்ரோலியம் சட்டம் மீதான கோரிக்கை தவறான அர்த்தம் கொண்டது. நாட்டில் எண்ணைய், கியாஸ் தகராற்று வழக்குகளில் குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்ற ஒரு முன்னணி வழக்கறிஞர் பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் மிகத் தெளிவாக இயற்றப்பட்டிருக்கிறது என்று அழுத்தமாக சொன்னார்.

பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்று நீதிமன்றங்கள் சொல்லவில்லை என்று தமது பெயரை குறிப்பிட விரும்பாத அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் அவசர காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனால் அது செல்லாது என்று சரவாக் வெகு செளகரியமாக காரணம் சொல்லலாம்.ஆனால் அது உண்மை அல்ல.

மலேசியாவில் அவசர காலம் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடியது. அவசர காலம் 1969 முதல் 1971 வரை அமலில் இருந்தது. நாடாளுமன்றம் முழுமையாக செயல்பட்டது. அக்காலம் முழுவதும் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அச்சட்டங்கள் யாவும் இன்னமும் அமலில் உள்ளன. பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் ஓர் அவசர சட்டம் அல்ல என்று அவர் கூறினார்.

1963 மலேசிய ஒப்பந்தத்தின் கீழ் சரவாக்கிற்கு சிறப்பு உரிமைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அந்த வழக்கறிஞர், இதனால் எண்ணெய், கியாஸ் மீது உரிமையும் அதிகாரமும் பெற்றிருக்கிறது என்று அர்த்தமாகாது என்றார்.

சபா, சரவாக் ஆகியவை மற்ற மாநிலங்கள் போல் அல்ல. அவற்றுக்கு கூடுதல் அடுக்கு உரிமைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் மிக முக்கியமானது சபாவும் சரவாக்கும் கூட்டரசை ஏற்றுகொண்டது தான். கூட்டரசை ஏற்றுகொண்டதன் மூலம் மத்திய, மாநில அரசாங்களுக்கிடையில் தனி அதிகாரங்கள் இருப்பதை அவை ஏற்றுகொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

சரவாக்கை பொறுத்த வரை மேம்படுத்தப்பட்ட உரிமைகளை செயல்படுத்தலாம். அதில் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை அலட்சியப்படுத்த முடியாது என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.

எண்ணெய், கியாஸ் தொடர்பில் எந்தவொரு சட்டத்தையும் இயற்றும் சட்டப்பூர்வ தகுதி சரவாக்கிற்கு இருக்கிறதா? பதில்…நிச்சயமாக இல்லை. மாநிலத்தின் 1958 எண்ணெய் சுரங்க சட்டம் பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தை விட மேலானது என்று சரவாக் கடந்த சில ஆண்டுகளாகவே கூறிவருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அந்த வழக்கறிஞர் சொன்னார்.

பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் 5 விழுக்காடு ரொக்க ராயல்டி பண கட்டமைப்பை கொண்டிருக்கிறது. சரவாக் இன்றளவும் அப்பணத்தை பெற்று வருகிறது. உண்மை நிலை இப்படி இருக்க எண்ணெய் சுரங்க சட்டம் இன்னமும் செல்லுபடியாகிறது என்று சரவாக் எப்படி சொல்ல முடியும் என்று அந்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தை ஏற்றுகொண்டு ராயல்டி ரொக்கப் பணத்தையும் சரவாக் இப்போதும் பெற்று வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here