போலி வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி எஞ்சின் எண்ணெய் விற்பனை ; 13 பேர் கைது

கோலாலம்பூர்:

நேற்று ஆரா டாமன்சாரா மற்றும் கெப்போங்கில், காவல்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) இணைந்து நடத்திய நடவடிக்கையில் போலி வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி எஞ்சின் எண்ணெயை பாட்டிலில் அடைத்து விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனையின் போது பங்களாதேஷ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏழு வெளிநாட்டினர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் வனவிலங்கு குற்றப் பணியகம்/சிறப்பு புலனாய்வு விசாரணை (WCB/PSK) துணை இயக்குநர் SAC முகமட் அஸ்லின் சதாரி கூறினார்.

“கிட்டத்தட்ட இரண்டு மாதம் புலனாய்வு தகவல் சேகரிப்பைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

குறித்த கும்பல் அங்கீகாரம் இல்லாமல் எஞ்சின் எண்ணெயை மீண்டும் பாட்டிலில் நிரப்பி, பாட்டில்களில் போலி முகவரிகளைப் பயன்படுத்தி நன்கு அறியப்பட்ட உள்ளூர் மற்றும் அனைத்துலக வாகன உற்பத்தியாளர்களின் லேபிள்களை ஒட்டியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

“பின்னர் அவர்கள் மின் வணிக தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் குறித்த தயாரிப்புகளை சந்தைப்படுத்தினர். இந்த கும்பல் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், மில்லியன் கணக்கான ரிங்கிட் லாபத்தை ஈட்டியதாகவும் நம்பப்படுகிறது, ”என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கு 2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் பிரிவு 102 1(c) மற்றும் 2011 வர்த்தக விளக்கச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here