நெகிரி செம்பிலான் தேர்தல்: 13,263 தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகித்தது தேர்தல் ஆணையம்!

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தகுதியுள்ள வாக்காளர்களுக்காக மொத்தம் 13,263 தபால் வாக்குச் சீட்டுகளை (Postal Ballots) தேர்தல் ஆணையம் (EC) இன்று அனுப்பி வைத்துள்ளது.

தேர்தல் அலுவலர்கள், காவல்துறை, இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 12,669 தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இத்ரஸ் கூறினார்.

மேலும் வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களுக்கு 343 தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 11 அமைப்புகளின் அதிகாரிகளுக்கு 251 தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

இந்தத் தபால் வாக்குகள் வழங்கும் பணி, போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முன்னிலையில் முறைப்படி மேற்கொள்ளப்பட்டது.

தபால் வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டைக் குறிப்பதுடன், அடையாள அறிவிப்புப் படிவத்தையும் (Form 2) சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும், வாக்குப்பதிவு நாளான ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் (Returning Officers) சென்று சேர வேண்டும்.

தபால் வாக்குச் சீட்டுகளைப் புகைப்படம் எடுப்பதோ அல்லது அதனைச் சமூக வலைதளங்களில் பகிர்வதோ கூடாது. வாக்குகளின் ரகசியத் தன்மையைப் பொதுமக்கள் கட்டாயம் பேண வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 103 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் தகுதிபெற்ற் மொத்த வாக்காளர்கள் 889,490 பேர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டிய வாக்களிப்பு வரும் ஜூலை 28 அன்று நடைபெறும் என்றும், அதில் 16,884 இராணுவத்தினர் மற்றும் 5,455 போலீசார் வாக்களிக்க உள்ளனர் அத்தோடு பொது வாக்களிப்பு (Polling Day) வரும் ஆகஸ்ட் 1 இல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here