6,000 பேரை ஆட்குறைப்பு செய்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

நியூயார்க்:

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 6,000 பேரை ஆட்குறைப்பு செய்வதாக நேற்று செவ்வாய்க்கிழமை (மே 13) அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 3 விழுக்காட்டுக்கும் குறைவு என்று மைக்ரோசாஃப்ட் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.

“மாற்றம் கண்டு வரும் சந்தை நிலவரத்திற்கு இடையே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சிறப்பானதொரு இடத்தில் நிலைநிறுத்தத் தேவைப்படும் நிர்வாக ரீதியிலான மாற்றங்களை தொடர்ந்து செய்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் 10,000 பேரை ஆட்குறைப்பு செய்தது. அதன் பிறகு அந்நிறுவனம் மேற்கொள்ளும் பெரிய ஆட்குறைப்பு இதுவாகும்.

2024 ஜூன் மாத நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உலகளவில் 228,000 பேர் வேலை செய்தனர். அவ்வப்போது ஆட்குறைப்பு செய்வதோடு ஊழியர்களின் பொறுப்புகளையும் மாற்றி வருகிறது அந்நிறுவனம்.

தற்போதைய ஆட்குறைப்பால் வாஷிங்டன் நகரின் ரெட்மான்ட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் பணியாற்றும் 2,000 பேர் பாதிக்கப்படுவர் என நம்பப்படுகிறது. மேலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ஜூலை 13 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here