ஜோகூர்:
கடந்த வாரம் பேராக்கின் தெலுக் இந்தானில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெடரல் ரிசர்வ் யூனிட் (FRU) பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் திட்டத்தில் ஜோகூர் காவல்துறை இதுவரை RM30,295 நிதியை திரட்டியுள்ளது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மாநில காவல்துறையினரால் நிதி திரட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
“எங்கள் காவல்துறை தோழர்களின் உயிரைப் பறித்த துயரமான சாலை விபத்து பற்றிய செய்தியைக் கேட்ட பிறகு, சில உதவிகளை வழங்குவதற்காக இந்த ஃபிளாஷ் நன்கொடை இயக்கத்தை நாங்கள் ஏற்பாடு செய்தோம்,” என்று, இன்று ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் 218வது காவல் தின கொண்டாட்டங்களுடன் இணைந்து நடைபெற்ற இரத்த தான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக அடுத்த வாரத்திற்குள் புக்கிட் அமானில் உள்ள மத்திய காவல்துறைத் தலைமையாகத்திற்கு குறித்த நிதியை நேரில் சென்று வழங்குவதாக அவர் கூறினார்.
கடந்த மே 13 அன்று, பேராக், ஈப்போவில் உள்ள சுங்கை செனமில் அமைந்துள்ள FRU இன் பிரிவு 5 ஐச் சேர்ந்த போலீசார் பயணித்த லோரி கற்களை ஏற்றிச் சென்ற லோரியுடன் மோதியதில் 9 FRU அதிகாரிகள் கொல்லப்பட்டனர், ஏனையோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















