கல்வி அமைச்சின் புத்தகப் பற்றுச்சீட்டின் மூலம் 94.5% மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் ஊக்கம் பெற்றது

கோலாலம்பூர்,

பள்ளிக்கூடம் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க  புத்தக பற்றுச்சீட்டை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு  கல்வி அமைச்சால் தொடங்கப்பட்ட வரலாற்றுப்பூர்வ தினமாக மே 30ம் தேதி அமைந்திருக்கிறது.

கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்மால் இந்தப் பற்றுச் சீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. 4ம் ஆண்டு தொடங்கி 6ம் ஆண்டு வரையிலான ஆரம்பப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு 50 ரிங்கிட், இடைநிலைப்பள்ளி, உயர்கல்விக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கும் தலா 100 ரிட்கிட் என்ற விகிதத்தில் இந்தப் புத்தகப் பற்றுச் சீட்டுகள் கடந்த ஆண்டு மே 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 2024ம் ஆண்டு வரையில் வழங்கப்பட்டன.

இந்நடவடிக்கையின் பலனாகக் கடந்த ஆண்டு நிறைவில் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய இலக்கு 94.5 சதவீதம் அதிரித்திருப்பதாக கோத்தா புத்தக வாரிய (பிகேபி) தலைமை செயல்முறை அதிகாரி அடிபா ஒமார் தெரிவித்தார்.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி கடந்த ஆண்டுக்கான திட்டம் முடிவடைந்தபோது 100 சதவீதம் பற்றுச்சீட்டு பயன்படுத்தப்பட்டு விட்டடதாகவும், அதனைப் பெற்றுக் கொண்டோர் முழுமையாக அதன் பலனை அடைந்து விட்டனர் என்றார் அவர்.

புக் கேப்பிட்டல் மை தளத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட 8 லட்சம் புத்தகங்களை 1,000 புத்தக விற்பனையாளர்கள் விநியோகித்தனர். மேலும் இதன் வாயிலாக தேசிய புத்தகத் தொழில் துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய நிலையில்  ஐடிஇ ஆய்வு மையம் மேற்கொண்ட  ஆய்வில் 711  பிரதிநிதிகள் உட்படுத்தப்பட்டனர் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அந்தப் பிரதிநிதிகள் 99.2 சதவீதம் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். அத்துடன், மேலும் சில ஆக்கப்பூர்வமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. விரிவான இணையத் தொடர்பு, எளிதான முறையில் பற்றுச்சீட்டைப் பயன்படுத்துதல்,பயனர் நட்பு இணையதளங்களை ஏற்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் அதில் முக்கியமானவையாகும்.

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான திட்டம் வெற்றிகரமானது என்று 94.5 விழுக்காட்டினரும்,மாணவர்களுக்கு தரமான வாசிப்புப் பொருட்களை வழங்க இது பயனுள்ளதாக இருந்தது என்று  97.5 விழுக்காட்டினரும் ஒப்புக்கொண்டனர் என்று அவர் கூறினார்.   தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று 2024 புத்தகப் பற்றுச்சீட்டு திட்டத்தின் பொருளாதார தாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் அடிபா இந்த விவரங்களைக் கூறினார்.

நேரடியாக பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட நிலையுடன் ஒப்பிடும்போது இணையத்தின் வழி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டது மிகவும் இலகுவானதாக இருந்ததாக அவர்கள் கூறினர். தரமான புத்தகங்களை அணுகும் நடவடிக்கைகளை  நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் சபா சரவா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கும் 3.5 மில்லியன் பேரை  இலக்காக் கொண்டு இதன் மூலம் கல்வி அமைச்சு  விரிவுபடுத்தியுள்ளது .

இணையத்தின் வழி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவது மிக திருப்தியளிப்பதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட 72.1 சதவீத பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

இணைய வணிகத் தளங்கள் , அஞ்சல் சேவை நிறுவனங்களுடனான கூட்டுறவின் மூலம் இந்நடவடிக்கை சாத்தியமானது. இந்தத் திட்டம் வாசிப்புப் பொருட்களுக்கான அணுகுமுறையை மட்டுமல்லாமல், வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது.

நகரம், கிராமம் என வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் சமத் தரத்திலான புத்தகங்களை பெறுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்றுத் திறனாளி மாணவர்களும் பிரெயில் வாசிப்புப் பொருட்களை இதன் மூலம் பெற்றுப் பயனடைகின்றனர். அறிவாற்றலைப் பெறும் அரசு நடவடிக்கைகளில் யாரும் ஓரங்கட்டப்படவில்லை என்பதை இது தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது என்று தமது சிறப்புரையில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here