மலாக்கா,
மலாக்கா மாநிலம் டுரியான் துங்காலில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டதச புஜ காளியம்மன் ஆலயத்தில், மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் கடல் அலையென திரண்ட இந்த விழா, ஆன்மிக புனிதத்தையும் பாரம்பரிய கலைவடிவங்களையும் ஒருசேரக் கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

காலை 9.45 மணிக்கு இராஜகோபுரம், சுந்தர விமானம் மற்றும் சிகர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற, வேத பாராயணங்களும் நாதஸ்வர இசையும் முழங்கின. குருமார்கள் கும்பங்களை ஏந்தி வந்து, கருங்கல் சிலைகளுக்கு மகா அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்வை ஆலய சக்தி உபாசகர், அருள்வாக்கு சித்தர் “அம்மா” சிவஸ்ரீ சண்முகநாதன் சுவாமிகள் தலைமையிலான குருமார்கள் குழு வழிநடத்தினர்.

நிகழ்வில், சிவஸ்ரீ முத்துகுமார சிவாச்சாரியார் (மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் பீடம்), சிவஸ்ரீ மகேந்திரன் குருக்கள், ஆலயத் தலைவர் திரு ஜெகன், மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ பி. சண்முகம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாவடி பிரத்தியங்கிரா தேவி கோவில் சிவாச்சாரியார் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட குருமார்கள் மற்றும் 10,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு, சிற்பக் கலைச்சிறப்புகளுடன் அமைந்துள்ள இந்த ஆலயம், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களின் அழகிய வடிவமைப்பைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு சிலையும், தூணும் “அம்மா” அவர்களின் நேரடி பார்வையிலும், ஆன்மிக சிந்தனையிலும் உருவானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருத்தலம் ஆன்மிக வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், கலை, கலாசாரம் மற்றும் சமூக நல சேவைகளுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் ஒரு உயரிய ஆன்மிகத் தலமாக திகழும் என நம்பப்படுகிறது. இந்த ஆலய கட்டடப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிய நலதாரர்களுக்கு “அம்மா” அவர்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.




















