கோலாலம்பூர்:
நாட்டில் தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று மிக வேலமாக பரவிவருகிறது. அதன் பதிவு முன்னர் போல இல்லாது இருப்பினும், நோய்த்தொற்றால் பாதிக்காமல் இருக்க மலேசியர்கள் பலர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதனால் நாட்டில் கோவிட்-19 தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.
முதியோர் மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் அதிக அளவில் சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அண்டை நாடான தாய்லாந்தில் புதிய திரிபு கொண்ட கோவிட்-19 கிருமி பரவி வருவதால் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறினர்.
இருப்பினும் மலேசியாவில் கோவிட்-19 நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் “பினாங்கில் விடுமுறைக் காலங்கள் அல்லது பண்டிகை நாள்களில் அதிக அளவில் மக்கள் சுற்றுலா, ஒன்றுகூடல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவார்கள், இதனால் கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்பு அதிகரிக்கும்,” என்று பினாங்கின் சுகாதாரக் குழுவின் தலைவரான டேனியல் கூய் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பினாங் மாநிலத்தில் 1,594 பேர் கோவிட்-19 கிருமித்தொற்றுக்குள்ளானார்கள், ஆனால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.



















