விமான விபத்து: தாய் கண்முன்னே மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் கருகிய சோகம்..!

அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விடுதி அருகே டீக்கடை நடத்தி வந்த பெண் ஒருவர், படுகாயம் அடைந்த நிலையில், மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த அவரது 14 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ளான். அவரை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனைக்காக காத்திருக்கிறார்கள்.

சீதாபான் என்ற அந்த பெண் டீக்கடையில் இருந்துள்ளார். அவரது மகன் ஆகாஷ் படானி (வயது 14) டீக்கடை அருகில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். விமானம் மோதி தீப்பிடித்ததில் டீக்கடையும் எரிந்துள்ளது. இதில் சீதாபென் படுகாயம் அடைந்துள்ளார்.

அப்போது விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று ஆகாஷ் படானியின் தலையை பலமாக தாக்கியுள்ளது. அதேவேளையில் சீதாபானுவுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மகனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் தலையை தாக்கிய பாகம் எரியத் தொடங்கியுள்ளது. இதில் ஆகாஷ் கரிக்கட்டையாகியுள்ளார். தன் கண்முன்னே மகன் கருகிய நிலையில் காப்பாற்ற முடியவில்லையே என சிகிச்சை பெற்று வரும் சீதாபென் கதறியது பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

திருமணம் ஆன 2 நாளிலேயே விமானத்தில் பயணம் செய்த நபர் பலியான சோகம்

பவிக் மகேஷ்வாரி (26) என்பவர் லண்டனில பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்கான வதோதராவிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளார். விடுமுறைக்கு வந்த பவிக் மகேஷ்வாரிக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

அவசரமாக பெண் பார்த்துள்ளனர். தற்போது எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம். பின்னர் வரும்போது பெரிய அளவில் வரவேற்பு விழா எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான் திருமணம் முடிந்து 2 நாள் கழித்து லண்டனுக்கு சென்றபோது, விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். விமான நிலையத்திற்கு அவருடைய மனைவி வழி அனுப்ப வந்துள்ளார். வழி அனுப்பிவிட்டு வீடு திரும்புவதற்குள் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பவிக் மகேஷ்வாரி லண்டனில் படித்து அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். வருடத்தில் இரண்டு வாரம் குடும்பத்தினரை சந்திக்க வதோதரா வந்து செல்வாராம். அப்படி இந்த வருடம் வரும்போது கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணம் செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜூன் 10ஆம் தேதி திருமணம் முடிந்து வீடே மகிழ்ச்சியில் திகைத்தது. தற்போது துக்க வீடாக மாறியுள்ளதாக பவிக் மகேஷ்வர் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here