கோலாலம்பூர்:
சைபர்ஜெயாவில் கடந்த வாரம் 20 வயது பல்கலைக்கழக மாணவி Maniishapriet Kaur Akhara படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபர், தனது காதலியின் சாவி மற்றும் அனுமதி கார்டைப் பயன்படுத்தி அவருடைய குடியிருப்பில் நுழைந்ததாக செலாங்கூர் காவல் துறை தலைவர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட மாணவியுடன் ஒரே யூனிட்டில் வாழ்ந்த காதலி, பரீட்சைகள் முடிந்தவுடன் சொந்த ஊருக்கு திரும்பியிருந்ததாகவும், குற்றவாளி முன்னதாகவே அந்த வீட்டில் தங்கி இருந்ததால் அந்த இடம் குறித்து நன்கு அறிந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
ஜூன் 24ஆம் தேதி, Maniishapriet இறுதி பரீட்சைக்கு தயாராகியிருந்தபோது, அவர் வீட்டில் தனியாக இருந்ததை குற்றவாளி தெரிந்து கொண்டு அந்த இரவு வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. மாணவியை தாக்கிக் கொலை செய்த பிறகு, அவருடைய கைபேசி, மடிக்கணினி மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்றதாகவும், அதனை பயன்படுத்தி செலவு செய்ததாகவும் காவல் துறை தெரிவித்தது.
இதுதொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரதான சந்தேகநபர், மாணவியின் வீட்டுக்காரி, சந்தேகநபரின் தோழியாகக் கருதப்படும் பெண், மற்றும் மற்றொரு தனிநபர்.
இதனிடையே இது குறித்து 2 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர், மற்றொரு நபர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார். சிறையில் உள்ள இன்னொரு நபர், மாணவியின் பொருட்களை பெற்றதாக கூறப்படுவதால் அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது, ஆனால் அவர் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
“முதன்மை சந்தேகநபரையும், மற்றவர்களையும் கைது செய்துள்ளதால், இந்த வழக்குக்கு தேவையான விஷயங்களை பெற்றுவிட்டதாக நாங்கள் கருதுகிறோம். விரைவில் முழுமையான விசாரணையை முடிப்போம்,” என்றும் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
மாணவியின் சடலம் ஜூன் 24 அன்று காலை 10 மணியளவில் அவரது தோழி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனையில், மாணவி தலையில் கடுமையான தாக்குதலால் உயிரிழந்ததாகவும், பாலியல் வன்முறையின் சாட்சியங்கள் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.





















