மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 47ஆம் ஆண்டு திருமுறை விழா சிறப்பாக நடைபெற்றது .

செராஸ்,

 இளம் தலைமுறையை நன்னெறிப் பண்புகளுடன் வளர்த்துத் தரும் நோக்கத்தில், மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 47ஆம் ஆண்டு திருமுறை விழா, பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியில் மிகுந்த விமரிசையுடன் நடைபெற்றது. விழா சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்தப்பட்டதாக, செராஸ் வட்டாரப் பேரவையின் தலைவர் கலைமாமணி தொண்டர்மணி ராமையா கேசவன் தனது தலைமை உரையில் தெரிவித்தார். இன்றைய இளம் தலைமுறை சமய நெறிகளை பின்பற்றி வளமான வாழ்க்கையை கட்டியெழுப்புவதை உறுதி செய்யும் வகையில், இவ்விழா போன்ற நிகழ்ச்சிகள் முக்கிய பங்களிப்பு ஆற்றுவதாக அவர் கூறினார்.

மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநில துணைத்தலைவர் தொண்டர்மணி சரஸ்வதி வேலு, “நமது சமயம் நமது கடமை” என்ற அடிப்படையில், இளையோரின் எதிர்காலத்தில் ஒழுங்கான சமய வழிப்பாடுகளை நிலைநாட்ட இத்தகைய விழாக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தனது சிறப்புரையில் வலியுறுத்தினார். பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி க. சுந்தரி, இளம் மனங்களில் சமய ஒழுக்கத்தை உறுத்தும் வகையில், முழுமையான நன்னெறிப் பண்புகளுடன் இவ்விழா நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்

ஜூன் 27ஆம் தேதி காலை 8.30 மணிக்கு, நந்திக்கொடி ஏற்றல் மற்றும் நடராஜர் – சிவகாமி நால்வருக்கான சிறப்பு பூஜையுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது. இதில் திருமுறை பிரிவு 1 முதல் 4 வரை தனிநபர், ஆண், பெண், குழுப் பிரிவு, பதிகப் பாராயணம், மாறுவேடப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இந்தப் போட்டிகளுக்கான நடுவராக மலேசிய இந்து சங்கம் ரவாங், காப்பார், ஸ்ரீ அண்டலஸ் மற்றும் பந்திங் வட்டாரப் பேரவையைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் பொறுப்பேற்றனர். தலைமை நடுவராக ஆலோசகர் செல்வரத்தினம் மாணிக்கம் செயல்பட்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மலேசிய இந்து சங்கத்தின் அரசாங்கத் தொடர்பு அதிகாரி முனைவர் முரளிதரன் பரமசிவம், மாநிலப் பேரவை கௌரவச் செயலாளர் முருகன் கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் நிருவாகத் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி மா. சுபத்திரா, மாணவர் நலத்துணைத் தலைமை ஆசிரியர் திரு ப. முனியாண்டி, இணைப்பாடத் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி மு. கண்மணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அறிவழகன் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, செமினி வட்டாரத் தலைவர் முத்து கிருஷ்ணன் ராமசாமி, செயலாளர் சிவசங்கரன் ராமு, துணைத் தலைவர் டாக்டர் கணபதி வைத்திலிங்கம், செயலாளர் பூமாலா மாரி, பொருளாளர் பரமேஸ்வரி கோவிந்தசாமி, மகளிர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவர்கள் மற்றும் சமய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மாறுவேட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

மொத்தமாக சுமார் 250க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நெறியாளராக வி.த. கோபிநாதன் செயல்பட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழா, இளம் தலைமுறைக்கு சமய அறிவையும் ஒழுக்கத்தையும் விதைக்கும் ஒரு நன்னெறிப் புனிதக் கூடமாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here