கோலாலம்பூர்,
மலாக்கா மாநிலத்தின் சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில், ‘Smart AI Tourism Melaka’ எனப்படும் புதிய ஸ்மார்ட் சுற்றுலா திட்டத்தை செப்டம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மலாக்கா முதல்வர் Datuk Seri Ab Rauf Yusoh தெரிவித்தார்.
இத்திட்டம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் எளிதாக மாநிலத்தின் முக்கிய இடங்களை கண்டறியவும், அவர்கள் அனுபவத்தை சிறப்பாக மாற்றவும் வழிவகுக்கும் என அவர் கூறினார்.
“இது ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, பல மொழிகளில் தகவல் வழங்கும் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்படும். மலாக்காவின் வரலாற்றுச் சிறப்புகளும், சுற்றுலா முக்கிய இடங்களும் இத்திட்டத்தின் மூலம் வெளிக்கொணரப்படும்,” என்றார் அவர்.
நேற்றிரவு நடைபெற்ற ‘Melaka Telecommunication Appreciation and Synergy Night’ நிகழ்வில், Melaka ICT Holdings Sdn. Bhd. (MICTH) மற்றும் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் – Rohas Euco Industries Berhad, Maxis Broadband Sdn. Bhd., மற்றும் U Mobile Sdn. Bhd. ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.
“Smart AI Tourism Melaka” திட்டம் வழிகாட்டி பலகைகள் போன்ற நிலையான தகவல் விரிவுரைகளுக்கு மாற்றாக, QR குறியீடுகள், இணையதளம் மற்றும் மொழிபெயர்ப்பு வசதிகள் மூலம் துல்லியமான மற்றும் இணையதள அடிப்படையிலான இரண்டு வழி தகவல்தொடர்பை வழங்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத்தில் தற்போது 99.97% 4G மற்றும் 89.7% 5G இணைய வசதி உள்ளதாகவும், செல்ஃபோன் இணைய வேகம் 121 Mbps என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2027க்குள் மாநிலத்தின் மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளிலும் 100% 4G மற்றும் 5G இணைய வசதியை நோக்கி செயல்படுவதும் மாநில அரசின் குறிக்கோளாகும் என்று அவர் கூறினார்.





















