ஜோகூரில் ஒரு கட்டடத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் RM180 மில்லியன் ஊழல் சம்பந்தமாக, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் ஒரு ஒப்பந்த மேலாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு நிறுவன இயக்குனர்களை கைது செய்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
முக்கிய சந்தேக நபரான ஒப்பந்த மேலாளர் ஜூலை 24, 2025 வரை 7 நாட்கள், அவரது மனைவி ஜூலை 21, 2025 வரை 3 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு இயக்குனர்கள் ஜூலை 22, 2025 வரை 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை புத்ராஜெயா நீதிமன்றத்தில் SPRM தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நடைபெற்றது.
40 முதல் 60 வயதுக்குள் உள்ள சந்தேக நபர்கள் “Op Ways” என்ற சிறப்பு நடவடிக்கையின் போது கிளாங்க் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
SPRM அதிகாரிகள் ஒப்பந்த மேலாளர் வீட்டில் சோதனை நடத்தியபோது, RM7.5 மில்லியன் (ஊழல் தொகை என சந்தேகிக்கப்படுகிறது) பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே நேரத்தில், ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 2.5% ஊழல் பணமாக வழங்க வேண்டும் என சந்தேக நபர் நிபந்தனை விதித்திருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அந்த இரண்டு நிறுவனங்களுக்கு 6 ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
SPRM-இன் இயக்கத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ Ahmad Khusairi Yahaya , இந்த கைது மற்றும் விசாரணையை உறுதி செய்ததுடன், இந்த வழக்கு SPRM சட்டத்தின் 2009 ஆம் ஆண்டின் பிரிவு 16(a)(A) மற்றும் 17(A)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.




















