அமைதிப் பேரணி அமைதியான முறையிலும் பாதுகாப்புடனும் நடைபெறவே வலியுறுத்துகிறோம். – தேசிய போலீஸ் தலைவர் அறிவுறுத்து

கோலாலம்பூர்

மலேசிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில் நிலவியுள்ள ஜனநாயக மதிப்பீடுகளைப் பேணும் வகையில், மக்கள் அமைதியான முறையில் ஒன்று கூடி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை அரச மலேசிய போலீஸ் படை மதிக்கிறது என்று தேசிய போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை சனிக்கிழமை டத்தாரான் மெர்டேகாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேரணி சீராகவும், பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டுடனும் நடைபெற காவல்துறையினர் வழிகாட்டும் வகையில் செயல்பட உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பேரணிக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் மற்றும் பேரணி பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பேரணியில் பங்கேற்கும் அனைவரும் நாட்டின் சட்டத்தையும் பொது ஒழுங்கையும் மதித்து நடக்க வேண்டும். அதேசமயம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பும் அமைதியும் உறுதி செய்யப்பட வேண்டும்,” என்றார் அவர்.

மேலும், பேரணியில் பங்கேற்காத பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, அதிக வாகன நெரிசலை தவிர்க்க, போக்குவரத்து அறிவிப்புகளை முன்னதாகவே சரிபார்த்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“அனைத்து தரப்பினரின் பொறுப்புணர்வும் ஒத்துழைப்பும் இருந்தால், ஜனநாயக நடைமுறையும் சட்ட அமலாக்கமும் இடையிலான சமநிலையை பேண முடியும்,” எனவும் தேசிய போலீஸ் தலைவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here