புத்ரஜெயா
நாட்டின் நுழைவுக் கட்டுப்பாட்டு மையங்களில் இடம்பெறும் ‘Counter Setting’ எனப்படும் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, அதிகாரிகளுக்கான தீவிர தேர்வு மற்றும் புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS,
தெரிவித்துள்ளது.
“இந்த முறைமையின் கீழ் நேர்மையான மற்றும் ஒழுக்கமுடையவர்கள் என அடையாளம் காணப்படும் அதிகாரிகள் மட்டுமே எல்லை இடங்களில் பணியமர்த்தப்படுவர்,” என தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சுஹைலி முகமட் சைன் கூறினார்.
“குடிநுழைவு, சுங்கம் உள்ளிட்ட பல துறைகளிலிருந்து வந்துள்ள பணியாளர்களில் அதிக பிரச்சினைகள் இருந்தன. அதை முற்றிலும் அழிக்க விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.
‘Counter Setting’ என்பது குடிநுழைவு கவுண்டர்களில் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் இடையே நடைபெறும் சட்டவிரோத வழிவகைகள் என விளக்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கடுமையான கவலைகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், 30 வயதுக்குள் இருக்கும் குடிவரவு துறை அதிகாரி ஒருவர், RM8,000 பணம் மற்றும் மூன்று கைபேசிகள் வைத்திருந்ததற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் மட்டுமே அவர் சேவையில் இருந்துள்ளார். இது, உள்துறை விதிமுறைகளை மீறியது என கூறப்படுகிறது. அவர் தற்போது சிலாங்கூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
“இதனிடையே 30 ஆண்டுகள் சேவையில் இருந்த ஒருவர்கூட இந்த நிலையில் சிக்கியிருப்பது வருத்தமளிக்கிறது. ஊழல் செய்பவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யும் நிலையான நடைமுறை இல்லாததே ஒரு பெரிய சவால்,” என சுஹைலி கூறினார்.
அத்துடன், ஊழல் அதிகாரிகளை வெறும் இடமாற்றம்தான் செய்கிறார்கள் என்ற பொதுமக்கள் நம்பிக்கையை அவர் கவலைப்பட்டார். அரசாங்க பணியாளர்களுக்கு சட்டரீதியான நீதி வழங்கும் நடைமுறை அவசியமானதாக இருப்பதாகவும், அதனால் தாமதம் ஏற்படுவதையும் அவர் விளக்கினார்.
ஊழல் அதிகாரிகளை விரைவில் நீக்கும் தெளிவான மற்றும் சட்டப்படி உறுதியான ஒரு நடைமுறையை செயல்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகக் சுஹைலி கூறினார். இது குறித்து அட்லர்ணி ஜெனரல், பொதுப்பணித்துறை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.




















