ஸம்ரி வினோத் – ஃபிர்டாவ்ஸ் விவகாரம் அதிருப்தி, கண்டனம்-ம.இ.கா., ஜ.செ.க., பி.கே.ஆர். எம்.பி.க்கள் கூட்டறிக்கை

கோலாலம்பூர்,

சுயேச்சை மத போதகர்களான ஸம்ரி வினோத் – ஃபிர்டாவ்ஸ் வோங் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவதில்லை என முடிவு செய்திருக்கும் தேசிய சட்டத்துறை தலைவருக்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் (ஜசெக), பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் (கெ அடிலான்), எஸ்.கேசவன் (சுங்கை சிப்புட்) ஆகிய நால்வரும் சட்டத்துறைத் தலைவரின் முடிவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு நேற்று நாடாளுமன்றத்தில் கூட்டாக நிருபர்கள் கூட்டத்தை நடத்தினர். ஸம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை என சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அளித்திருக்கும் விளக்கத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.

ஏனெனில் அவ்விருவருக்கு எதிராக நிறைய போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். அவ்விருவரின் செயல் குறித்து வீடியோ பதிவுகள் உள்ளன. பொது அறிக்கைகள் உள்ளன. சமூக வலைத்தள உள்ளடக்கங்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் மிக தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன என்றும் அவர்கள் கூறினர்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், அவை இன, சமயம் தொடர்பான விஷயங்களை அவமதிக்கும் தன்மைகளைக் கொண்டிருக்கிறது. உணர்ச்சியைத் தூண்டும் தன்மைகளையும் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆகவே, சட்டத்துறைத் தலைவரின் இந்த முடிவு மிகவும் வேதனையளிக்கிறது. சம்பந்தப்பட்ட அந்த இருவரின் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படாதது குறித்து இந்திய சமூகம் அதிருப்தியடைந்திருக்கிறது.

இந்த நாட்டில் சட்ட விதிமுறைகளின் கீழ் சமச்சீரான தன்மைகளுக்கும் நீதி கோட்பாடுகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டங்களை சமச்சீராக பயன்படுத்த வேண்டும். பாகுபாடு இன்றியும் பயம் இன்றியும் சட்ட அமலாக்கம் இருக்க வேண்டும்.

இனம் அல்லது சமயம் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய வெறுப்புணர்வுகளைத் தூண்டும் பிரச்சினைக்கும் அவமதிக்கும் செயல்களுக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஆகவே, இருக்கக்கூடிய ஆதாரங்கள் அடிப்படையில் இந்த முடிவை சட்டத்துறை அலுவலகம் மறு ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம் நாட்டின் நீதி நடைமுறைகள்மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதற்கிடையே, பிரதமர் துறை (சட்டம் மறு சீரமைப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான்) இந்த விஷயத்தைத் தொட்டுப் பேசிய விதம் ஏமாற்றமளிப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் சாடினார்.
மடானி அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் நாங்களும் இருக்கின்றோம். ஆனால், இந்திய சமூகத்தில் இருந்து பல சவால்களை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் என்று அவர் கூறினார்.

இதுபோன்ற பிரச்சினைகளை அமைச்சரும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியதாக சில விஷயங்கள் அமைந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து இன்னும் ஆழமான புரிந்துணர்வைப் பெறுவதற்கு அமைச்சர் எங்களுடன் முன்கூட்டியே கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற அறிவிப்பு திடீரென வெளியிடப்படுவதால் இந்திய சமூகத்தில் அதிருப்தி உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

ஸம்ரி வினோத் – ஃபிர்டாவ்ஸ் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரம் இல்லை என அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார். இதனை சட்டத்துறை தலைவர் அலுவலகம் கூறியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here