கோலாலம்பூர்,
அடிப்படை ரஹ்மா நன்கொடை (SARA) திட்டத்தின் கீழ், கடந்த வாரம் பிரதமர் அறிவித்த 100 ரிங்கிட் நிதி உதவியைப் பயன்படுத்தி, மக்கள் ஆகஸ்ட் 31 முதல் அத்தியாவசிய பொருட்களை வாங்கத் தொடங்கலாம்.
ஒரு முறைக்கான இந்த நன்கொடை, தானாகவே பயனாளியின் அடையாள அட்டையில் (MyKad) நேரடியாக சேர்க்கப்படும். இதன் மூலம், பயனாளர்கள் 90,000-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களை ரொக்கமின்றி வாங்கும் வசதி பெறுவார்கள்.
சுமார் 22 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. முக்கியமானது என்னவெனில், இதுவே முதன்முறையாக வருமான நிலை, குடும்ப வருமானம் என்பவற்றைப் பொருட்படுத்தாமல், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.
மைடின், லோட்டஸ், எக்கோன் சேவ் மற்றும் 99 ஸ்பீட்மார்ட் உள்ளிட்ட முக்கிய விற்பனை மையங்களுடன் சேர்ந்து, நாடு முழுவதும் உள்ள 4,100-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகளில் இந்த நன்கொடை டிசம்பர் 31 வரை பயன்படுத்தக்கூடியதாகும்.




















