கோலாலம்பூர்,
நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசின் கட்டணக் குறைப்பை படிப்படியாகக் சரியான கட்டமைப்பின்வழி செய்யப்போவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம், தெரிவித்தார்.
திடீர் கட்டணக் குறைப்புகள் கல்வி, சுகாதாரம் மற்றும் Sumbangan Tunai Rahmah (STR) போன்ற அவசியமான துறைகளுக்கு வழங்கும் விரிவான நிதி ஒதுக்கீடுகளை பாதிக்கும் அபாயம் இருப்பதால், அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இன்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.
2022-ல் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 5.5% ஆக இருந்த கட்டணம் 2023-ல் 5% ஆகவும், 2024-ல் 4.1% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இதன் மூலம் நாட்டின் கடன் அதிகரிக்காமல், நிதி நிலையான முறையில் கையாளப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கல்விக்கான ஒதுக்கீடு அதிகரித்து 64 பில்லியன் ரிங்கிட் ஆகவும், சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு 45 பில்லியன் ரிங்கிட் ஆகவும், STR மற்றும் SARA உதவித்தொகை 15 பில்லியன் ரிங்கிட் ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தக் கொள்கை காரணமாகவே வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
























