கோலாலம்பூர்,
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே 6,060 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு, சிங்கப்பூர் குடியுரிமையைத் தேர்வு செய்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜூன் 30 வரை பதிவான இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு முழுவதும் பதிவான 16,930 பேர் விலகல் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், தொடர்ச்சியாக அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது.
PN கோத்தா பாரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2015 முதல் 2025 ஜூன் மாதம் வரை சிங்கப்பூர் குடியுரிமைக்காக மொத்தம் 98,318 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டுவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு 7,394 பேர், 2016இல் 8,654 பேர், 2017இல் 7,583 பேர், 2018இல் 7,665 பேர், 2019இல் 13,362 பேர், 2020இல் கொவிட்-19 காலத்தில் 5,591 பேர், 2021இல் 7,956 பேர், 2022இல் 5,623 பேர், 2023இல் 11,500 பேர், 2024இல் அதிகபட்சமாக 16,930 பேர் மற்றும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 6,060 பேர் குடியுரிமை விலகியுள்ளனர்.
2020இல் கொவிட்-19 பரவலால் சரிவு ஏற்பட்டாலும், பிந்தைய ஆண்டுகளில் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், மலேசியர்களின் வெளிநாட்டு குடியேற்றம் மற்றும் திறமையாளர் வெளியேற்றம் (Brain Drain) தொடர்பான கவலையை மேலும் வலுப்படுத்துகின்றன.





















