மாடுகளின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயன்ற 7 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

கோத்தா பாரு:

காட்டு மாடுகளின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயன்ற 7 வயது சிறுவன், ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் மா ச்சாங், கம்போங் கெலாவேயில் உள்ள காஃபா ஆற்றில் நேற்று மாலை நடைபெற்றது.

“மாலை 4.22 மணிக்கு சம்பவம் குறித்த அவசர அழைப்பு கிடைத்தது. சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எங்கள் குழுவினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். மாலை 5.07 மணிக்கு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 0.5 மீட்டர் தொலைவில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று மாச்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு தலைவர், மூத்த தீயணைப்பு அதிகாரி II முகமட் ஒஸ்மான் கூறினார்.

சுகாதார அமைச்சக ஊழியர்கள் சிறுவன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். தொடர்ந்து, உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு உடன்பிறந்தவர்களில் இரண்டாவது மகனான சிறுவன், மூன்று நண்பர்களுடன் கவண் விளையாடிக் கொண்டிருந்தபோது காட்டு மாடுகளின் கூட்டம் துரத்தியதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றை கடக்க முயன்றபோது அவர் வழுக்கி விழுந்துள்ளார்.

அவருடன் இருந்த மூன்று நண்பர்கள், ஆற்றங்கரையில் உள்ள புதரில் ஒளிந்து கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here