திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், வயநாட்டிலும் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுரல்மலாவின் சாலியார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முண்டகைப் பகுதியில் ராணுவ வீரர்களால் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தின் கீழ் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வயநாட்டில் இப்போது மீண்டும் கனமழை கொட்டி வருவதால் முண்டகை பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதை அடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு ஆற்றில் சேறு கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மண்சரிவு ஏற்பட்டதா என அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.






















