சாலை வரி, காப்புறுதி இல்லாத 270 ஆடம்பரக் கார்கள் பறிமுதல் – பிரபலங்கள், தொழில்முனைவோர்கள் சிக்கினர்

கோலாலம்பூர்,

கடந்த இரண்டு வாரங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சாலைப் போக்குவரத்துத் துறையின் Ops Luxury 3.0 சிறப்பு நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் சாலை வரி அல்லது insurance இல்லாத 270 ஆடம்பரக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஃபெராரி, லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட உயர் ரக கார்கள் அடங்கும் என ஜேபிஜே இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி (Datuk Aedy Fadly Ramli) தெரிவித்துள்ளார்:

சில வாகனங்கள் மூன்று ஆண்டுகளாக சாலை வரி செலுத்தாமல், அதிகபட்சமாக RM29,000 வரை நிலுவைத் தொகை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. ஜோகூரில் மட்டும் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ஒன்றின் வருடாந்திர சாலை வரி RM12,000 ஆகும். கோலாலம்பூரில் பதிவான மிக உயர்ந்த செலுத்தாத பெறுமதி RM29,000 ஆகும்.

இந்த நடவடிக்கை பிரபலங்கள், சமூக ஊடகத்தில் பேசப்படுபவர்கள், (influencers), தொழில்முனைவோர்கள் ஆகியோரை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்கள் மீண்டும் பெறுவதற்கு, அவர்கள் நிலுவையில் உள்ள சாலை வரி, காப்புறுதி மற்றும் அபராதங்களை முழுமையாகச் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“செல்லுபடியாகும் சாலை வரி மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பிற சாலைப் பயனாளர்கள் மட்டுமல்ல, விபத்து நேர்ந்தால் ஓட்டுநரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்,” என்று ஃபட்லி எச்சரித்தார்.

மேலும், இந்த ‘ஓப்ஸ் லக்ஸரி 3.0’ நடவடிக்கை சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும், அடுத்த மாதங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here