பூச்சோங் ஸ்பாவில் சட்டவிரோத பல் சிகிச்சை – இந்தோனேசியப் பெண்ணுக்கு 28 மாதங்கள் சிறை

கோலாலம்பூர்:

பூச்சோங்கிலுள்ள ஒரு ஸ்பா வளாகத்தில் சட்டவிரோத பல் சிகிச்சைகள் செய்த குற்றச்சாட்டில், இந்தோனேசியப் பெண் ஒருவருக்கு 28 மாதங்கள் சிறைத்தண்டனை, மொத்தம் RM25,000 அபராதம் என்பன விதிக்கப்பட்டன.

நேற்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாத சுசி சுசந்தி என்ற குற்றவாளி, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (Act 586), பல் மருத்துவச் சட்டம் 2018 (Act 804) ஆகியவற்றின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி நூர் ரூஸிலாவதி இந்தத் தண்டனை வழங்கினார்.

அவருக்கு சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்யப்படாமல் தனியார் பல் மருத்துவமனையை நடத்தியதற்காக RM15,000 அபராதம் (அல்லது செலுத்தாதால் 6 மாதங்கள் சிறை) விதிக்கப்பட்டது. மேலும், மலேசிய பல் மருத்துவக் கவுன்சிலில் (MDC) பதிவு செய்யாமல் பல் வெனியர் சிகிச்சை செய்ததற்காக 18 மாதங்கள் சிறை விதிக்கப்பட்டது.

மேலும் , தன்னை பதிவு செய்யப்பட்ட பல் மருத்துவர் என நம்பும்படி சாதனங்களை பயன்படுத்தியதற்காக RM10,000 அபராதம் (அல்லது செலுத்தாதால் 4 மாதங்கள் சிறை) விதிக்கப்பட்டது.

வழக்கின் உண்மைப் பின்னணிப்படி, ஆகஸ்ட் 5 மதியம் 4.20 மணியளவில், சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் பல் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குடிநுழைவு துறையினர் இணைந்து தாமான் பபூ ச்சோங் இண்டாவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் சோதனை நடத்தியபோது, இக்குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here