ஜோகூரில் நிலநடுக்கத்துக்குப் பிறகும் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய்கள் பாதுகாப்பாக ஊள்ளன

கோலாலம்பூர்:

ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கேஸ் குழாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள் அனைத்தும் முழுமையாக பாதுகாப்பாக உள்ளன என்று பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட் (PGB) உறுதிப்படுத்தியுள்ளது.

“நாட்டின் தெற்கு பகுதி முழுவதும் இத்தகைய சூழ்நிலைகளுக்காக முன்னரே திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன,” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிகாமாட் கம்பிரஸர் நிலையம், சிகாமாட் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட குழாய் பாதையில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எந்த வித அசாதாரண நிலையும் கண்டறியப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், SCADA கண்காணிப்பு அமைப்பு மூலம் குழாய் அழுத்தம் மற்றும் செயல்பாட்டு அளவுகள் அனைத்தும் நிலையானதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோனாஸ் கேஸ், நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெறுவதற்காக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மலேசிய வானிலை துறையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

“பொது மக்களின் பாதுகாப்பும் எங்கள் செயல்பாடுகளின் நிலைத்தன்மையும் எங்களுக்கு முக்கியம். நிலைமையில் மாற்றம் ஏற்படுமானால் உடனடி நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்,” என்று நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here