கோலாலம்பூர்:
தொழிலதிபர் டத்தோ வீரா ஃபர்ஹாஷ் வஃபா சல்வடோர் (Datuk Wira Farhash Wafa Salvador), முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லிக்கு (Rafizi Ramli) சட்டபூர்வ எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ரஃபிசி தனது நிறுவனத்துடன், ஒரு தகவலாளிக்குத் (whistleblower) தொடர்பு இருப்பதாகக் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஃபர்ஹாஷ் கோரியுள்ளார்.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை, தான் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ரஃபிசி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், தனது கருத்துகள் அனைத்தும் உண்மை என்றும், நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கு, பொதுமக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஃபிசியின் மகன் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு, ஃபர்ஹாஷின் நிறுவனத்துடன் தொடர்புடைய சில தகவல்கள் தனக்குக் கிடைத்தன என்று ரஃபிசி கூறிய பின்னரே இந்தச் சர்ச்சை தொடங்கியது.
கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி, புத்ராஜெயாவில் (Putrajaya) இரண்டு முகமூடி அணிந்த நபர்கள், ரஃபிசியின் மகனைத் தாக்கி, ஊசியால் குத்தி, ரஃபிசியின் மனைவிக்கும் மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















