ஜோகூர் பாரு:
ஜோகூரிலுள்ள ஒரு பெட்ரோல் நிலைய நிர்வாகி, பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடந்த மோசடியில் சிக்கி RM91,167 இழந்தார்.
தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ரவூப் சிலாமாட் தெரிவித்ததாவது, 38 வயதான உள்ளூர் ஆண், “டிண்டர்” என்ற சமூக ஊடகத்தின் மூலம் ஒரு பெண்ணுடன் அறிமுகமானார்.
பின்னர், அந்த பெண் Inventoresources.site என்ற இணையதளம் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் பாதிக்கப்பட்டவரை நம்ப வைத்து, ஜூலை 25 முதல் 29 வரை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரில் உள்ள ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யச் செய்தது தெரியவந்துள்ளது.
பணம் செலுத்தப்பட்ட பின், பாதிக்கப்பட்டவரின் கணக்கு முடக்கப்பட்டதுடன், அந்த பெண்ணை தொடர்புகொள்ள முடியாத நிலையிலும் அவர் சிக்கியுள்ளார்.
தாம் மோசடியில் சிக்கியதை உணர்ந்த அந்த ஆண், நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார் என்று ரவூப் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கும் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



















