நடைமுறைக்கு வந்தது பகடிவதைக்கு எதிரான சட்டம் -அதிக பட்சம் 10 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர்:

மலேசியாவில் பகடிவதை எதிர்ப்புச் சட்டம் நடப்புக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, பகடிவதை குற்றம் புரிவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

நாட்டில் பகடிவதைப் பிரச்சினை பொதுமக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில் அதன் தொடர்பான சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஜூலை மாதம் முதல் நடப்புக்கு வந்தன.

துன்புறுத்தல், மிரட்டல், பகடிவதை, அவமதித்தல், அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் முதலிய குற்றங்கள் திருத்தப்பட்ட சட்டங்களின் வழி கையாளப்படும்.

ஒரு வேளை தூண்டுதலுக்கு ஆளானவர் தற்கொலை செய்ய முயன்றால் அல்லது செய்துகொண்டால் அத்தகைய சம்பவங்களிலும் புதிய சட்டங்களைப் பயன்படுத்த முடியும்.

அதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

அண்மைச் சட்டத் திருத்தங்கள் இந்த விவகாரத்தை அரசாங்கம் கடுமையாகக் கையாளவிருப்பதைப் பிரதிபலிப்பதாக வழக்கறிஞர் முகமட் அக்ரம் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

ஒருவரின் அனுமதியின்றி அவருடைய தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் வெளியிடுவது இனிமேல் கடும் குற்றமாகப் பார்க்கப்படும் என்பதை அவர் சுட்டினார்.

“இணைய மிரட்டல்களைக் கையாள இத்தகைய சட்டத் திருத்தங்கள் முக்கியம். இணைய மிரட்டல்கள் உடல் ரீதியாகத் தீங்கிழைப்பது இல்லை. ஆனால் அவற்றால் ஒருவரின் உணர்வுகளுக்கும் மனநலத்துக்கும் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்,” என்று அவர் சொன்னார்.

பள்ளிகளில் சட்டக் கல்விப் பாடங்களைச் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பகடிவதை என்பது சாதாரணமானதல்ல என்றும், மாறாக அது கடும் குற்றம் எனும் விழிப்புணர்வை அனைவருடமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here