கோலாலம்பூர்:
புரூனே நாட்டின் சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா, மலேசிய மாமான்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று முதல் நான்கு நாட்கள் அரசு பயணமாக மலேசியா வந்தடைந்தார்.
சுல்தான் ஹசனல் போல்கியா மற்றும் இளவரசர் அப்துல் மாதீன் போல்கியா, அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பயணம் செய்த சிறப்பு விமானம், இன்று மாலை 3.03 மணிக்கு சுபாங் இராணுவ விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
அவர்களை வரவேற்க ஜோகூர் துங்கு தெமெங்கோங் துங்கு இத்ரிஸ் இஸ்கந்தார் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஃஹ்மி பாஃட்சில் ஆகியோர் உடன் இருந்தனர்.
இறங்கியவுடன், சுல்தான் ஹசனல் போல்கியா முதல் படைத்தள ராயல் ரேஞ்சர் ரெஜிமெண்டின் (Ceremonial) 28 அதிகாரிகள் மற்றும் படைவீரர்களால் அமைக்கப்பட்ட காவல் படையினரின் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நாளை, சுல்தான் ஹசனல் போல்கியாவுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு வரவேற்பு வழங்கப்பட்டு, அதன் பின்னர் பேரரசருடன் சந்திப்பு மற்றும் இரவு நேர விருந்தில் கலந்து கொள்வார்.
விஸ்மா புத்த்ரா வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த பயணத்துடன் இணைந்து மலேசியா-புரூனே 26வது ஆண்டு தலைவர்கள் ஆலோசனை (ALC) நடைபெறும். இதன் பகுதியாக, சுல்தான் ஹசனல் போல்கியா புதன்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆண்டு ஆலோசனை, இரு நாடுகளுக்குமிடையேயான வலுவான நட்பு, பிராந்திய மற்றும் சர்வதேச நிலைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய மேடையாக கருதப்படுகிறது.
























