இந்தியா – மலேசியா உறவில் புதிய மைல்கல்: பாமாயில் ஏற்றுமதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உறுதி!

புத்ரா ஜெயா, பிப்ரவரி 8, 2026:

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் மலேசியப் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியாவிற்குத் தேவையான உயர்தரமான மற்றும் நிலையான பாமாயிலை (Sustainable Palm Oil) வழங்குவதில் மலேசியா தனது அர்ப்பணிப்பைத் தொடரும் என அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பாமாயில் சாகுபடியில் இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்கும் என இருநாட்டு தலைவர்களும் உறுதி செய்வதாக கூறினர்.

மேலும் பாமாயில் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் கீழ்நிலை (Downstream) தயாரிப்புகளை உருவாக்குவதில் இணைந்து செயல்பட இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

அத்தோடு பாமாயில் தொடர்பான சந்தை அணுகல் சிக்கல்களை அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவாகத் தீர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மலேசியா-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (MICECA) கீழ் உள்ள சாத்தியக்கூறுகளை முழுமையாகப் பயன்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதேநேரம் ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தை (AITIGA) தற்போதைய உலகளாவிய வர்த்தக நடைமுறைகளுக்கு ஏற்ப எளிதாக்கும் வகையில் அதனை மறுஆய்வு செய்வதை அவர்கள் வரவேற்றனர்.

மலேசியாவில் இந்தியத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் வருகையை அன்வார் வரவேற்றார். இது மலேசியாவில் உயர்திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

அதேபோல், மலேசிய நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு சிறந்த முதலீட்டு இடமாகத் திகழ்வதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிப்பதாகத் தலைவர்கள் அங்கீகரித்தனர். இதனை மேலும் விரிவுபடுத்தவும் அவர்கள் இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here