கெனிங்காவ்:
இந்த மாதம் அதீத வெப்பம் காரணமாக கம்போங் நுந்துனான் மற்றும் கம்போங் ரந்தாயிலுள்ள ஓடைகளில் பெலியன் மீன்கள் பெருமளவில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரணமாக வெப்பமான வானிலை காரணமாக ஓடைகளின் நீர்தரத்தில் ஏற்பட்ட மாற்றமே மீன்களின் இறப்பிற்கு காரணம் எனக் சபா மீன்வளத்துறை கண்டறிந்துள்ளது. மேலும் ஒன்றோடொன்று இணைந்திருந்த இரண்டு ஓடைகளில் நீர் வறண்டு மாசுபட்டதாகவும் அது கூறியது.
அதேபோன்று, கம்போங் கோலா மான்சோக், கம்போங் தபிலுங், கம்போங் கைங்கரன், கம்போங் மன்சோருலுங், கம்போங் ரொம்பான் உள்ளிட்ட பல அருகிலுள்ள பகுதிகளிலும் மீன்கள் இறந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மீன்வள துறையின் ஆய்வக அறிக்கையின்படி, இறந்த மீன்களின் வயிற்றுப் பகுதி, துடுப்புகள் மற்றும் செவுள்களில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், நீரின் வெப்பநிலை அதிகரித்தது மற்றும் pH அளவும் உயர்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமான அவை இறந்துள்ள சாத்தியக்கூறுகள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இறந்த மீன்கள் கீழ்நோக்கி செல்லாமல் தடுக்க உள்ளூர் மீனவர்களை வலைகளை அமைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதோடு, விப்ரியோ காலரா தொற்று அபாயம் காரணமாக சமைக்கப்படாத பெலியன் மீன்களை உண்ண வேண்டாம் எனவும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.




















