கோலாலம்பூர்:
இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தில் (Mandi district), செவிலியர் ஒருவர், கடுமையான ஆற்று வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், ஒரு குழந்தைக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஆற்றைக் கடந்து சென்ற சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
40 வயதான கமலா தேவி (Kamla Devi), மோசமான வானிலை காரணமாகச் சுகாதார மையத்திற்கு வர முடியாத ஒரு குழந்தையின் வீட்டிற்குச் சென்று, இந்தத் தடுப்பூசியைப் போட்டார்.
அவர் தன் காலணிகளைக் கையில் வைத்துக்கொண்டு, தனது தோளில் ஒரு பையுடன், ஆற்றின் மீதுள்ள பாறைகளைக் கடந்து செல்லும் காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சுதார் ஆரம்பச் சுகாதார மையத்தில் (Sudhar Primary Health Centre) பணிபுரியும் கமலா, தனது ஒரே கவலை, குழந்தையின் பாதுகாப்புதான் என்று கூறினார்.
கமலாவின் அர்ப்பணிப்பு, பலரின் பாராட்டுகளையும் நன்றியையும் பெற்றுள்ளது. ஆனால், உள்ளூர் சுகாதார அதிகாரிகள், பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான அபாயங்களை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்காக, அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















