இன்று பெட்டாலிங் ஜெயா, சிகாமாட் ஆகிய இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவு

நோன்புப்பெருநாளின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 22) நாடு முழுவதும் இரண்டு இடங்களில் காற்றின் தரம் தற்காலிகமாக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணி நிலவரப்படி, பெட்டாலிங் ஜெயா மற்றும் சிகாமாட் ஆகிய இடங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் காற்று மாசுக் குறியீடு (APIMS) தரவு காட்டுகிறது.

இது இன்று காலை 7 மணிக்கு, பெட்டாலிங் மாவட்டத்திற்கான காற்று மாசுக் குறியீடு (API) அளவீடு 108 என்ற ஆரோக்கியமற்ற அளவைக் காட்டியது; பிற்பகல் 3 மணியளவில், வாசிப்பு 118 ஆக உயர்ந்தது.

அதேநேரம் சிகாமாட்டில், சனிக்கிழமை மதியம் காற்று மாசுக் குறியீடு 103 என்ற ஆரோக்கியமற்ற மட்டத்தில் இருந்தது, பிற்பகல் 2 மணி நிலவரப்படி 107 ஆக சற்று உயர்ந்தது.

ஒரு இடத்தின் காற்று மாசுக் குறியீடு 101-200க்கு இடையில் இருந்தால் அது ஆரோக்கியமற்றது, அதுபோல காற்று மாசுக் குறியீடு 201-300 க்கு இடையில் இருந்தால் மிகவும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. காற்று மாசுக் குறியீடு 300க்கு மேல் இருந்தால், காற்றின் தரம் அபாயகரமானதாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது.

இவ்விரு இடங்கள் தவிர, இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில்,ஏனைய 62 இடங்களும் மிதமான மாசுபாடு கொண்ட காற்றின் தரத்தை தற்காலிகமாக பதிவு செய்தன. அதில் பேராக்கின் தஞ்சோங் மாலிம் (47 API அளவு ), சரவாக்கில் காபிட் (43 API அளவு ) மற்றும் சாரிகேய் (45 API அளவு ) மற்றும் சபாவில் சண்டாக்கான் (41 API அளவு ) ஆகும்.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தற்போதைய நிலைமையை கண்காணித்து, புகையின் சாத்தியமான விளைவுகளைச் சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here