மலேசியாவில் கூகுளின் முதல் தரவு மையம், எல்மினா வணிகப் பூங்காவில் (Elmina Business Park) கட்டப்பட்டு வருகிறது. 2026-க்குள் நிறைவடையும் இந்த மையம், ஒரு நாளைக்கு 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் வரை பயன்படுத்தக்கூடும். இது, 31,000-க்கும் மேற்பட்ட மக்களின் தினசரித் தேவைகளுக்குச் சமமாகும்.
ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள சிலாங்கூரில், இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தரவு மையங்களுக்கு, குளிரூட்டுவதற்காக அதிகளவு தண்ணீரும், மின்சாரமும் தேவைப்படுகின்றன.
மலேசியாவின் 108 தரவு மையங்களில், 50 சிலாங்கூரில் அமைந்துள்ளன. இது, உள்ளூர் நீர் விநியோகத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏர் சிலாங்கூர் (Air Selangor) நிறுவனம், தனது 1,000 மில்லியன் லிட்டர் நீர் இருப்புக் கொள்கலன், வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறது. ஆனால், கூகுளின் தரவு மையம் அமையவுள்ள கோம்பாக் (Gombak) போன்ற மாவட்டங்கள், 2050 வரை கடுமையான நீர் அழுத்தத்தைச் சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவேதான், பொதுமக்கள், தொழில்துறைத் தேவைகளைச் சமநிலைப்படுத்த, சிலாங்கூர் அரசாங்கம், தனது நீர் இருப்பு விகிதத்தை, 2030-க்குள் 20% ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.





















