கோலாலம்பூர்:
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் பகடிவதை (bullying) சம்பவங்களைக் கட்டுப்படுத்த, சிலாங்கூர் அரசாங்கம் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், குழந்தைகள், குறிப்பாக விடுதிகளில் தங்கும் மாணவர்கள், பகடிவதை சம்பவங்களைப் புகார் அளிக்க எளிதாக இருக்கும்.
மகளிர் மேம்பாடு சமூக நலத் துறைக்கான சிலாங்கூர் மாநிலக் குழுவின் தலைவர் அன்ஃபால் சாரி, பல குழந்தைகள் பயம் அல்லது அசௌகரியம் காரணமாக இதுபோன்ற சம்பவங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்று கூறினார்.
இந்தப் புதிய திட்டம், பகடிவதை சம்பவங்களைத் தடுத்து, கடுமையான விளைவுகளைத் தவிர்க்க உதவும் என்று அவர் நம்புகிறார்.
பகடிவதை, குறித்த தகவல்கள் தெரிந்தால், உடனடியாகக் கல்வி அமைச்சு அல்லது சமூக நலத் துறைக்கு (JKM) புகார் அளிக்குமாறு, பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் அன்ஃபால் கேட்டுக்கொண்டார்.
மேலும், பள்ளி மாணவர்களின் ஒழுக்க நடைமுறைகளைச் சீரமைக்க, 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளையும் மறு ஆய்வு செய்து வருவதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்திருந்தார்.
இந்த முயற்சிகள், மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.





















