கோலாலம்பூர்:
தேசிய தின விழாக் கொண்டாட்டத்திற்காக, செரெம்பான் நகரில் உள்ள பல சாலைகள், நாளை (ஆகஸ்ட் 29), வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும், தற்காலிகமாக மூடப்படும் என்று, காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த விழா, ஆகஸ்ட் 31-ஆம் தேதி, ஜாலான் யாம் துவான் பகுதியில் உள்ள, செரெம்பான் மாநகராட்சி திடலில் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, செரெம்பான் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஹத்தா சே டின் (ACP Mohammad Hatta Che Din) வெளியிட்ட அறிக்கையில், ஊர்வலம் செல்லவிருக்கும் வழித்தடங்களான, ஜாலான் பெர்ஹாலா, ஜாலான் டத்தோ ஹம்சா, ஜாலான் யாம் துவான், ஜாலான் டத்தோ ஷேய்க் அகமட், ஜாலான் டத்தோ பண்டார் துங்கல் ஆகிய முக்கியச் சாலைகள் மூடப்படும் என்று கூறினார்.
மேலும், லோரோங் ஜாவா, ஜாலான் லீ கீ சியோங் மற்றும் இஸ்தானா வட்டச் சாலை ஆகிய சாலைகளும் மூடப்படும்.
எனவேதான், வாகன ஓட்டுநர்கள், ஜாலான் துங்கு முனாவிர், ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ, ஜாலான் துங்கு ஹாசன் மற்றும் ஜாலான் டத்தோ அப்துல் மாலிக் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.
மேலும், போக்குவரத்து ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பொதுமக்கள், செரெம்பான் காவல்துறைத் தலைமையகத்தின் செயல்பாட்டு அறைக்கு, 06-6033477 அல்லது 06-6014999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





















