கோலாலம்பூர்:
GISB ஹோல்டிங்ஸ் நிறுவனம் மூடப்பட்டதால், வேலை இழந்து, சிரமங்களை எதிர்கொண்ட அந்நிறுவனத்தின் 300-க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக, மலாக்கா அரசாங்கம், ஒன்பது மாத கால மத அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
மலாக்கா மாநிலக் கல்வி, உயர்கல்வி, சமய விவகாரக் குழுவின் தலைவர் டத்தோ ரஹ்மாட் மரிமான் (Datuk Rahmad Mariman), இந்தத் திட்டம், மாநில இஸ்லாமிய சமய மன்றம், ஜாஇம் (JAIM), தேசிய பாதுகாப்பு மன்றம் (National Security Council) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தில், மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் ஊழியர்களின் குழந்தைகளுக்கு, பள்ளிப் பொருட்களும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, அவர்களுக்குத் தேவையான இதர உதவிகள், சமூக நல உதவி போன்றவையும் வழங்கப்படும்.
மேலும், முன்னாள் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறிய ரஹ்மா,ட் அவர்களின் குழந்தைகள் தொடர்ந்து பள்ளியில் படிப்பதாகவும், இடைநிறுத்தம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரிவினர் மத்தியில், பதிவு செய்யப்படாத திருமணங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.




















