காத்மாண்டு:
நேப்பாளத்தில் சமூக ஊடகங்கள்மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
கடந்த வாரம் (செப். 5) இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் (செப். 8) நாட்டின் பல பகுதிகளில் பெரும் அளவில் போராட்டங்கள் வெடித்தன.
காத்மாண்டு, பொக்ஹாரா, புட்வால், தாரன் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தெருக்களில் இறங்கி பேரணி நடத்தினர். போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேப்பாளத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் பிருதிவி சுபா கூருங் இன்று (செப். 9) வெளியிட்ட அறிக்கையில், சமூக ஊடகத் தடையை அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்தார். தற்போது சமூக ஊடகங்கள் வழக்கம்போல் இயங்கிவருகின்றன என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சிகள் பயன்படுத்தியதை நேப்பாள மனித உரிமை ஆணையம் கடுமையாக கண்டித்துள்ளது. இளைஞர்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக அவர்களை ஒடுக்குவது தவறு என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.





















