கோலாலம்பூர்:
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, பேராக் மாநில அளவிலான தேசிய தின அணிவகுப்பின் போது, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா (Sultan Nazrin Muizzuddin Shah) அவர்களைத் தாக்க முயன்றத, 41 வயதுப் பெண், நூர்ஹஸ்வானி அஃப்னி மொகமட் சோர்கி (Nurhaswani Afni Mohamad Zorki), மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், அவருக்கு மனச்சிதைவு நோய் (schizophrenia) இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்ட பெண், மனநலச் சட்டத்தின் கீழ், மேலதிக மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, குற்றவியல் சட்டம் பிரிவு 352-இன் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் மறு செவிமெடுப்பு அக்டோபர் எட்டாம் தேதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ள வேளையில் சம்பந்தப்பட்ட பெண், சிகிச்சைக்காகவும் மனநல மதிப்பீட்டிற்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.





















