கோலாலம்பூர்:
1 மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் (1MDB) ஊழல் வழக்கில் முக்கிய மூளையாகக் கருதப்படும் ஜோ லோவை கண்டுபிடித்து நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் மலேசியா அனைத்துலக ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்று புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை (CCID) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அதில், ஜோ லோவை நாட்டில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அழைத்து வருவதற்காக மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும், இந்த முயற்சி உள்துறை அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜோ லோ சீனாவில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியிருந்தார்.
“சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அனைத்துலக சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒத்துழைப்பை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது,” என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




















