கோலாலம்பூர்:
கிக் தொழிலாளர்களுக்கான 2025 சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான கிக் தொழிலாளர்களின் நலன், சமூகப் பாதுகாப்பு, உரிமைகள் உள்ளிட்ட அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவன் சிம் கூறுகையில், நாட்டின் முக்கிய பணியாளர்களின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த தொழிலாளர் குழுவுக்கான விரிவான பாதுகாப்பை மசோதா வழங்கும். குறிப்பாக, ஏபிஐ (API) அமைப்புகளை தளங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தானியங்கி பங்களிப்பு முறையை நடைமுறைப்படுத்தக்கூடிய வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த மசோதா நேற்று மக்களவையில் 18 செனட் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை அறிமுகப்படுத்தியதன் நோக்கம், தற்போதைய சட்டங்களில் காணப்படும் பலவீனங்களை சரிசெய்து, கிக் தொழிலாளர்களுக்கு வலுவான சட்ட பாதுகாப்பை வழங்குவதாகும்.





















