அரசியல் நோக்கங்களை திணிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்: சபா முதல்வர்

சபாவில் ஏற்பட்டுவரும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை புறக்கணித்து மக்கள் நலனுக்காக உதவ முனைந்து செயல்பட வேண்டும் என்று சபா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூர் கூறியுள்ளார்.

சபா மாநில சட்டமன்றத்தை பிளவுபடுத்துவது அல்லது மாநில தேர்தல் நடக்கும் சாத்தியம் பற்றி பேசுவது போன்ற அரசியல் விவகாரங்கள், தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலனில் எவ்வித நன்மையையும் தராது, அதையெல்லாம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதே நமது எல்லோருடையய முக்கிய நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நிலச்சரிவில் உயிரிழந்த எமிலி ஜானி,(38) மற்றும் அவரது மகன் ஜாரெல் மைர் அரிஸ்டோட்டில், (11) ஆகியோரின் குடும்பத்தினரை சந்திக்க கம்பூங் மூக் சென்ற ஹாஜிஜி, குடும்பங்களின் துயரங்களை கேட்டு வருத்தம் தெரிவித்தார்.

மாநில மற்றும் கூட்டரசு அரசுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கத் தொடங்கியுள்ளன. தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய நிதியாக RM1,000 உம் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு RM10,000 உம் வழங்கப்படும். நிலச்சரிவில் மூன்று வீடுகள் அழிந்ததால், யாயாசான் சபா ஒவ்வொரு குடும்பத்துக்கும் RM30,000 வழங்கி சுமையை குறைக்கும் முயற்சியில் உள்ளது என்றார் அவர்.

சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று காலை 8 மணிக்கான நிலவரப்படி, 107 கிராமங்களில் 813 குடும்பங்களின் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,897 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 13 பேர் நிலச்சரிவுகளில் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here