தஞ்சோங் கிளிங் அருகே 20 சட்டவிரோத குடியேறிகளுடன் இருந்த படகை MMEA தடுத்து நிறுத்தியது

மலாக்கா:

தஞ்சோங் கிளிங் கடல்பரப்பில் 20 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகை மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் அமலாக்க படையினர் (MMEA) தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கிள்ளான் கப்பல் போக்குவரத்து அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து படகு பற்றிய தகவல்கள் கிடைத்தன என்று. MMEA இயக்குநர், கடல்சார் கேப்டன் சலேஹுதீன் ஜகாரியா தெரிவித்ததார்.

அதன்பின், நேற்று இரவு 9.25 மணியளவில் தஞ்சோங் கிளிங்கிலிருந்து தென்மேற்கே சுமார் 11 கடல் மைல் தொலைவில், ரோந்து குழுவினரால் குறித்த படகு கண்டறியப்பட்டது என்றார்.

படகில் ஒன்பது முதல் 45 வயதுடைய 20 பேர் பயணித்ததாகவும், அவர்களில் 13 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

முதற்கட்ட விசாரணையின்படி, சட்டவிரோத குடியேறிகளை பூலாவ் பெசார் அருகே உள்ளூர் படகுக்கு மாற்றிக்கொடுக்க முயன்றபோது, படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் இவர்களில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் தொடர்புகொண்டு, கடத்தல் கும்பலின் சேவையைப் பயன்படுத்தியிருப்பதாகவும், ஆபத்தான இந்தப் பயணத்திற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருப்பதாகவும் சலேஹுதீன் கூறினார்.

படகு மற்றும் அதிலிருந்த அனைவரும் மேலதிக விசாரணைக்காக மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் படக்குத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த வழக்கு, குடிவரவுச் சட்டம் 1959/63 மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here